எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா மகன் வீடு, அலுவலகங்களில் சோதனை

எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணைய்யாவின் மகன் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

Update: 2021-03-24 21:48 GMT
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டதற்கு இணங்க வருமானவரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாகவும், அதை பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக வருமானவரித்துறையின் கட்டுப்பாட்டு மையத்துக்கு புகார்கள் வருகின்றன.

அவ்வாறு வரும் புகாரை தொடர்ந்து வருமானவரி துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடோன்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு வகையில் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு புகார்

இந்தநிலையில், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக, வருமான வரித்துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து பெரம்பூரில் உள்ள பிரகாஷ் வீடு மற்றும் அவர் நடத்தி வரும் மென்பொருள் நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

ரொக்கம் சிக்கவில்லை

இதுகுறித்து, வருமானவரி அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தலில் தங்களுக்கு வேண்டிய வாக்காளர்களுக்கு ஓட்டுபோடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வீட்டில் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதன் பேரில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்து அவரது வீட்டிலும் அவர் நடத்தி வரும் மென்பொருள் நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ரொக்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்