பணி நிறைவு சான்றிதழை உடனடியாக வழங்க வலியுறுத்தி எம்.பி.பி.எஸ். மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பணி நிறைவு சான்றிதழ் உடனடியாக வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-31 22:02 GMT
சென்னை, 

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தற்போது இறுதி ஆண்டு மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து இறுதி ஆண்டு மருத்துவ பயிற்சி பெறும் மாணவர்களின் பயிற்சி நாட்களை 2016-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் தேர்வு முடிந்து பணியில் சேரும் வரை நீட்டிப்பதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறுதி ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்கள் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிறைவு சான்றிதழ்

சென்னையில் உள்ள முக்கிய மருத்துவ கல்லூரிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறுதி ஆண்டு மாணவர்கள் உடனடியாக பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு பயிற்சி மாணவர்கள் கூறியதாவது:-

கடந்த 2015-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்து தற்போது பயிற்சி டாக்டராக இறுதி ஆண்டு பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் எங்களது பணி மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயிற்சி டாக்டராக வரும் வரை எங்களது பணியை நீட்டிப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே உடனடியாக எங்களுக்கு பணி நிறைவு சான்றிதழை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்