தேர்தல் ஆணையம் நோட்டீசுக்கு ஆ.ராசா பதில் பெண்களையும், தாய்மையையும் நான் அவதூறு செய்யவில்லை

பெண்களையும், தாய்மையையும் நான் அவதூறு செய்யவில்லை என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சி பற்றி நான் பேசியது உவமானம்தான் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீசுக்கு ஆ.ராசா பதில் அளித்துள்ளார்.

Update: 2021-04-01 00:12 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா செய்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சர், அவரது தாயாரை அவதூறாக பேசிய ஆ.ராசா மீது தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதோடு அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

அந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து ஆ.ராசா, தி.மு.க. தலைமைக் கழக வக்கீல் பச்சையப்பன் மூலம் தனது விளக்கம் அடங்கிய அறிக்கையை கொடுத்து அனுப்பினார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் அந்த அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் பச்சையப்பன் வழங்கினார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மன்னிப்பு கேட்டேன்

முதல்-அமைச்சருக்கு எதிராக நான் அவதூறாக பேசினேன் என்பதையும், பெண்கள், தாய்மை குறித்து நான் கீழ்த்தரமாக பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். பெண்களை அவதிப்பு செய்யும் எந்தவொரு நடவடிக்கையிலும் நான் ஈடுபட்டதில்லை.

தி.மு.க. என்ற மிகப் பெரிய இயக்கத்தில் இருந்துகொண்டு பெண்கள், தாய்மையை களங்கப்படுத்தும் செயலை கனவுகூட காண முடியாது.

என்னைப்பற்றி அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தவறாக குற்றம்சாட்டத் தொடங்கியபோது, பெரம்பலூரில் மார்ச் 27-ந்தேதியன்று பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் விளக்கம் அளித்தேன்.

அது நிலைமையை அமைதியாக்கும் என்றும் எனது விமர்சனத்தின் உண்மையான அர்த்தத்தை முதல்-அமைச்சர் புரிந்துகொள்வார் என்றிருந்தேன். ஆனால் எனது பேச்சை குறிப்பிட்டு திருவொற்றியூரில் மார்ச் 28-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.

எனவே மார்ச் 29-ந்தேதியன்று பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்தி அதன் மூலம் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.

அநீதி

தேர்தல் நடத்தை விதிகளையோ, வேறு சட்டங்களையோ நான் மீறவில்லை. எனக்கு அ.தி.மு.க. அளித்த புகார் மனு தரப்படவில்லை. எனவே என் மீதான குற்றச்சாட்டு குறித்து முழுமையாக என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை. எனவே அந்த புகார் நகலை எனக்கு அளிக்க வேண்டும்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக என் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடந்தால் உண்மை வெளிவரும். நான் தவறாக குற்றம்சாட்டப்படுகிறேன்.

இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் எதாவது முடிவு செய்தால், அது தற்போது நடக்கும் விசாரணையில் எனக்கு அநீதியை ஏற்படுத்தும். எனது முழு பேச்சின் நகலை தேர்தல் ஆணையம் பெற்று அதை பரிசீலிக்க வேண்டும்.

உவமானம்தான்

பேச்சின்போது உவமானம் கூறுவது எல்லோராலும் ஏற்கப்பட்ட ஒன்று. அரசியலில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடைந்த பரிணாம வளர்ச்சியையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடைந்த வளர்ச்சியையும் ஒப்பிட்டு நான் கூறிய உவமானம்தான் அது.

வெகு ஜனங்களால் இந்த உவமானத்தை எளிதாக விளங்கிக்கொள்ள முடியும். மு.க.ஸ்டாலின் கடின உழைப்பு இல்லாமல் தலைவரானார் என்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொடர் விமர்சனத்திற்கு பதிலாக அப்படி பேசினேன். எனது முழு பேச்சின் நகலை தேர்தல் ஆணையம் கவனித்தால், எனது மீதான குற்றச்சாட்டு நீங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்