வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் கைது

வேலூர் அருகே வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த அரசு பஸ் கண்டக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-04-01 20:43 GMT
வேலூர், 

வேலூரை அடுத்த தெள்ளூரில் நேற்று நள்ளிரவில் வீடு, வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரத்துக்கு தகவல் வந்தது‌. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்பேரில் அந்த பகுதியின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படையினர் தெள்ளூருக்கு சென்றனர். அங்குள்ள பஸ்நிறுத்தத்தில் சிலர் நின்று கொண்டிருந்தனர். பறக்கும்படையினரின் வாகனத்தை கண்டதும் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அதில், 2 பேரை பறக்கும்படையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் ரூ.17 ஆயிரம் ரொக்கம், ஒரு கட்சியின் துண்டுபிரசுரங்கள் மற்றும் வாக்காளர்களின் பெயர், செல்போன் எண் எழுதப்பட்டிருந்த நோட்டு ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் 2 பேரையும் அரியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

2 பேர் கைது

இதையறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம் உடனடியாக அரியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். கலெக்டர் முன்னிலையில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் வேலூர் அலமேலுமங்காபுரம் ஏரியூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் கார்த்திபன் (வயது 51), தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி (56) என்பதும், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்