வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை காரணமாக 3 மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2021-04-02 15:16 GMT
கொடைக்கானல்: 

குளுகுளு சீசன் தொடக்கம்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் குளுகுளு சீசன் தொடங்கும். 

இந்த ஆண்டு கோடை மழையுடன் குளுகுளு சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை விடுமுறை தினங்களில் அதிகரித்து வருகிறது. 

தங்கும் விடுதிகளில் அறைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. சீசன் காரணமாக விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் 
இந்த நிலையில் நேற்று புனித வெள்ளிக்கிழமையையொட்டி விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில்  குவிய தொடங்கினர். 

அவர்கள் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வட்டார சுகாதாரத்துறையின் சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இதனால் வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் பகல் 12 மணியளவில் நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பரிசோதனை மையத்தை மாற்ற கோரிக்கை

இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதை பார்த்த பலர் கொடைக்கானலுக்கு வராமல் திரும்பி சென்றனர். 

அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிக்கு வந்து வாகனங்களை அனுமதிக்கும்படி சுகாதாரத்துறையினரிடம் வலியுறுத்தினர்.  

இதையடுத்து வெளிமாநில சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. 

அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. சீசனையொட்டி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க கூடும். 

எனவே கொரோனா பரிசோதனை மையத்தை வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து செண்பகனூர் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்