அரசியலுக்கு இடையூறாக இருந்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன்; கோவையில் கமல்ஹாசன் பேட்டி

அரசியலுக்கு சினிமா இடையூறாக இருந்தால் சினிமாவைவிட்டு விலகிவிடுவேன் என்று கோவையில் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.

Update: 2021-04-04 23:53 GMT
மிரட்டல்கள் வந்தன
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் உங்களுக்கு புரிந்து இருக்கும். வரலாறு என்னை இங்கு கொண்டு வந்து நிற்க வைத்து இருக்கிறது. நான் என் வேலை உண்டு என்று இருந்தவன் தான். சினிமா நடிகர் மறுபடியும் நடிக்க சென்றுவிடுவார் என்று கூறினார்கள். பரமக்குடியில் உள்ள எனது வீட்டிற்கு கதவே கிடையாது. அந்த வீட்டில் பிறந்தவன் நான். நேர்மையாக கணக்கு கொடுத்து உள்ளதைதேர்தல் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர். இதே நேர்மையை ஆட்சிக்கு வந்தாலும் கொடுக்கும் தைரியம் எனக்கு உள்ளது.என்னில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். காலில் வலி இருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் எனது வேலையை செய்கிறேன். அரசியலில் சில மிரட்டல்கள் வந்தன. எல்லாத்துக்கும் தயாராகத்தான் வந்து இருக்கிறேன். அந்த மிரட்டலுக்கு எல்லாம் இங்கு இடம் கிடையாது. எஞ்சிய வாழ்நாள் மக்களுக்காக என்று முடிவு செய்துவிட்டேன்.

சினிமாவைவிட்டு விலகிவிடுவேன்
சினிமா என் தொழில். முடிந்தவரை பணம் சம்பாதித்து மற்றவர்களின் தயவில் வாழக்கூடாது என்பதற்காகத்தான் நான் தொடர்ந்து வேலை செய்வேன். என் அரசியலுக்கு அது இடையூறாக இருந்தால் சினிமாவைவிட்டு விலகிவிடுவேன். தற்போது ஒத்துக்கொண்ட படங்களில் நடித்துவிட்டு அடுத்த படங்கள் பற்றி ஆலோசிப்பேன். மற்றப்படி இது என்னமோ தவறு என்று கூறுபவர்களுக்கு நான் சுற்றிக்காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர். எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் பல படங்களில் நடித்தார். அது அவருக்கு அரசியல் போரை தொடுப்பதற்கு தேவையான படமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்