7-ம் தேதி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகம் இருக்கும் -சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இயல்பை விட வெயில் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Update: 2021-04-05 11:41 GMT
சென்னை

தமிழகத்தை நோக்கி வீசும் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த 4 மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஏனைய மாவட்டங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை உயரும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 80 சதவீதம் வரை இருப்பதால் கடலோர மாவட்டங்களில் பிற்பகல் முதல் அதிக வெக்கையாக இருக்கும் என்றும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் என்றும் கூறியுள்ள வானிலை மையம், இளநீர், மோர் மற்றும் நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை 11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காராணமாக, 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்