மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம்

மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

Update: 2021-04-08 23:19 GMT
மதுரை,

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 100-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. அந்த மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையிலும் கொரோனா கடுமையாக உயர்ந்து வருகிறது. மதுரையில் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறியதாவது:-

அரசு அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக கொரோனா அதிகமாக பரவி வரும் தெருக்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் 18 தெருக்கள் நகர் பகுதியிலும், 3 தெருக்கள் புறநகர் பகுதியிலும் உள்ளன. அவைகள் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

இதுபோல், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவும் என சந்தேகிக்கும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் கலந்து கொள்பவர்களில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர்களிடம் இருந்து சளிமாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். 3 நாட்களுக்கு ஒரு முறை என்ற சுழற்சி முறையில் இந்த கண்காணிப்பு பணிகள் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கிறது. இதில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தனியாக கண்காணிக்கப்படுவார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்று அரசு அறிவுறுத்தும் வழிமுறைகளை கடைபிடித்தால் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த முடியும். அதிகாரிகள் எவ்வளவு முயற்சித்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் தான் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தமுக்கம் மைதானம் அருகே சாலையில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் வசூலித்தனர்.

மேலும் செய்திகள்