விவாகரத்து பெற்ற தாயும், தந்தையும் கைவிட்டதால் தங்கையுடன் வி‌‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெயிண்டர்

விவாகரத்து பெற்ற தாயும், தந்தையும் கைவிட்டதால் தங்கையுடன் வி‌‌ஷம் குடித்து பெயிண்டர் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-10 15:46 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை சருக்கை வேலூர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவருக்கும் திருவையாறு அள்ளூர் பகுதியை சேர்ந்த காந்திமதிக்கும் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து பெற்று விட்டனர். இவர்களுக்கு கரண்ராஜ்(வயது 20) என்ற மகனும், இந்துமதி(18) என்ற மகளும் உள்ளனர்.

கரண்ராஜ் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்துமதி நர்சிங் படித்து வருகிறார். அண்ணன்-தங்கை இருவரும் தாய் காந்திமதியுடன் அள்ளூரில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

மனைவியுடன் விவாகரத்து பெற்ற பிறகு கனகராஜ் டெல்லிக்கு வேலைக்கு சென்று விட்டார். தன்னால் முடிந்த வேலைகளை பார்த்து மிகவும் க‌‌ஷ்டப்பட்டு மகன், மகளை காந்திமதி வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் காந்திமதி, நான் மிகுந்த கஷ்டப்பட்டு உங்களை வளர்த்து படிக்க வைத்து விட்டேன். இனிமேல் நீங்கள் உன் தந்தையுடன் சென்று விடுங்கள் என தனது மகன் மற்றும் மகளிடம் கூறினார். இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்டி வீட்டில் இருந்து வந்த இருவரும் சருக்கை வேலூர் தெருவில் உள்ள தங்களது தந்தை வீட்டிற்கு வந்து தங்கினர்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக கனகராஜ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் அண்ணன்-தங்கை இருவரும் நாங்கள் இனிமேல் உங்களுடன் தான் இருக்க போகிறோம். எங்களுக்கென வீடு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதை கனகராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக அண்ணன்-தங்கை இருவரும் அள்ளூருக்கு சென்று விட்டு மீண்டும் சருக்கைக்கு திரும்பி வந்தனர். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் கனகராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்த கரண்ராஜ், இந்துமதி ஆகியோரை விசாரணைக்காக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு வைத்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்களுக்கு வீடு வேண்டும் என இந்துமதியும், கூட்டு பட்டாவாக இருப்பதால் தற்போது வீட்டை தர முடியாது என கனகராஜும் தெரிவித்தனர். இதையடுத்து கோர்ட்டுக்கு சென்று உங்கள் பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் என இருதரப்பினரிடமும் போலீசார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

தாயும், தந்தையும் தங்களை கைவிட்டு விட்டதால் எங்கே செல்வது? என்று தெரியாமல் தவித்த அண்ணன்-தங்கை இருவரும் தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு வி‌‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதை பார்த்த சிலர், தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு அவர்கள் விரைந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்