மேலும் 2 வேட்பாளர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 2 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-04-12 23:17 GMT
சேலம், 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமெடுத்து உள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்தே வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மரணம் அடைந்தார்.

இந்தநிலையில், மேலும் 2 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கரன் (வயது 51). இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயசங்கரன் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம், கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்வாண்டையார்(வயது65). மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவரான இவர் அ.தி.மு.க. கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இந்தநிலையில் அண்மையில் ஸ்ரீதர் வாண்டையாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள தனது மைத்துனர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார்.

மேலும் செய்திகள்