“கர்ணன் படக்குழுவினர் 2 தினங்களில் தவறை சரிசெய்வதாக உறுதியளித்துள்ளனர்” - உதயநிதி ஸ்டாலின் தகவல்

கர்ணன் திரைப்படத்தில் இருந்த தவறை படக்குழுவினரிடம் சுட்டிக்காட்டியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-13 14:52 GMT
சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, அவரது 2வது படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

மேலும் கர்ணன் திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. அதன்படி, கடந்த 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கர்ணன் திரைப்படத்தைத் தான் பார்த்ததாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ணன் திரைப்படக் குழுவினரிடம் பேசி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறியுள்ள அவர், 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை 1997-ல் நடந்ததாக படத்தில் காட்டப்பட்டுள்ளதை படக்குழுவினரிடம் சுட்டிக்காட்டியதாகவும், அதனை இரு தினங்களில் சரிசெய்துவிடுவதாக படக்குழுவினர் உறுதியளித்ததாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்