விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை- சென்னை மாநகராட்சி கமிஷனர்

விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறி உள்ளார்.

Update: 2021-04-17 11:11 GMT
சென்னை

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி பதினோராவது மண்டலத்திற்கு உட்பட்ட போரூரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கொரோனா ஸ்கிரீனீங் சென்டர் மையத்தை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார். 

பின்னர் நிருபர்களை சந்தித்த  அவர் கூறியதாவது:-

கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநகராட்சி தரப்பிலும் சுகாதாரத்துறை தரப்பிலும் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. மாநில செயலாளர் ஒவ்வொரு வாரமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை மாநகரத்தில் உள்ள 15 மண்டலங்களில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது. இதனை 25 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 12 மையங்கள் உள்ளது. இந்த மையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிரித்து அனுப்பப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையும். ஸ்கிரீனிங் சென்டரில் தடுப்பூசி கிடையாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் உடனே தடுப்பூசி போட முடியாது.

நடிகர் விவேக் இறப்பு பெரிய பேரிழப்பாக நான் கருதுகிறேன். விவேக் இறப்புக்கும் கொரோனா தடுப்பூசி போட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 12 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என சென்று கொண்டிருக்கிறோம்.

இந்த வேகத்தில் சென்றால் தான் சென்னையை பாதுகாப்பான நகரமாக கொண்டுவர முடியும். கொரோனாவுக்காக மட்டும் இருபதாயிரம் பேர் தினமும் வேலை செய்து வருகிறோம் என கூறினார்.

மேலும் செய்திகள்