"ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை" - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டம்

ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று சென்னை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Update: 2021-04-22 10:20 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், ரெம்டெசிவிர் மருந்துகளும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும்போது தமிழக அரசு நிர்வாகத்திடம் எந்த வித கலந்தாலோசனையிலும் ஈடுபடாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து சென்னை சென்னை ஐகோர்ட்  தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதனால், இது தொடர்பாக அரசின் விளக்கங்களை பெற்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன் மீண்டும் வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி தமிழகத்தில் ரெம்டெசிவர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 1,167 டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்றும் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு 45 டன் ஆக்சிஜன் அனுப்பியதால் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

31 ஆயிரம் வயல் ரெம்டெசிவர் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் இல்லை என்றும், அவர்கள் அரசிடம் உதவி கேட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகள் கேட்டால் ரூ.783-க்கு ஒரு வயல் வீதம் வழங்கப்படும் என்று ஐகோர்ட்டில்  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்