ரூ.1¼ கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு: பெண் என்ஜினீயரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலையத் துறையில் ரூ.400 கோடிக்கு மின்விளக்கு பொருத்தும் ஒப்பந்தப் பணி பெற்றுத்தருவதாக கூறி ரூ.1¼ கோடி லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில் பெண் என்ஜினீயருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

Update: 2021-04-27 01:14 GMT
சென்னை, 

சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் கார்த்திகேயினி. மாநில நெடுஞ்சாலைத் துறையில் என்ஜினீயராக பணியாற்றும் இவர், தன் மீதான லஞ்ச வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பிரண்டு என்ஜினீயராக 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது, கோவில்களில் மின்விளக்கு பொருத்தும் ரூ.400 கோடி ஒப்பந்தப் பணியை டெல்லியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதாக கூறி, அதன் உரிமையாளர் அமன் கோயல் என்பவரிடம் ரூ.1.30 கோடியை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.

ரூ.1.30 கோடி லஞ்சம்

கார்த்திகேயினி வீட்டுக்குச் சென்று ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை அமன் கோயல் கொடுக்கும்போது கேமராவை மறைத்து வைத்து வீடியோ படம் எடுத்துள்ளார். அதில் பணத்தை கார்த்திகேயினி பெறுவதும், அவரது மகள் வித்யாலட்சுமி பணத்தை எண்ணுவதும் இடம் பெற்றுள்ளன.

மேலும் கூடுதலாக ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதால், அதை காசோலைகளாக அமன் கோயல் வழங்கியுள்ளார். அந்த காசோலைகளை கார்த்திகேயினி தன் மகள் வித்யாலட்சுமி, உதவியாளர் கேசவன் ஆகியோரது வங்கிக் கணக்குகளில் செலுத்தி பணத்தைப் பெற்றுள்ளார்.

ஆஜராகவில்லை

பின்னர் கார்த்திகேயினி இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால் அமன் கோயல் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அதை கொடுக்கவில்லை. மேலும், அறநிலையத்துறை ரூ.400 கோடிக்கு ஒப்பந்த பணி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை எனத் தெரியவந்தது.

இதுகுறித்து அமன் கோயல் கொடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மனுவில் கூறப்பட்டுள்ள முகவரியில் கார்த்திகேயினி வசிக்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த முகவரியில் அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் அனைத்தும் திரும்பி வந்துவிட்டது.

பல புகார்கள்

கார்த்திகேயினி விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. அவர் மீது இதேபோல பல லஞ்சப் புகார்கள் உள்ளன. இந்த வழக்கில் கார்த்திகேயினி, இடைத்தரகர்கள் தட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், கேசவன் மற்றும் கார்த்திகேயினியின் மகள் வித்யாலட்சுமி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

தள்ளுபடி

இந்த மனுவை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் அரசு வக்கீல் சண்முகராஜேஸ்வரன் ஆஜராகி, மனுதாரர் மீது லஞ்ச வழக்கு ஒன்று மதுரையில் நிலுவையில் இருப்பதாகவும், அவர் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றும் வாதிட்டார். இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்