அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

ரெம்டெசிவிர் மருந்துகளை பரவலாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அரசு-தனியார் ஆஸ்பத்திரிகள் படுக்கை வசதி அறிய புதிய ஆன்-லைன் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2021-04-30 00:05 GMT
சென்னை, 

சென்னை எழும்பூர் மகப்பேறு நல மருத்துவமனையில் நேற்று மாலை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்துதரப்பட்டு உள்ளன. சென்னையிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

போர்க்கால அடிப்படையில் 12,255 படுக்கைகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டப்பட்டு, கடந்த 2 நாட்களில் மட்டுமே 576 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளை (இன்று) 3 ஆயிரம் படுக்கைகள் கைவசம் வரும். 7-ந்தேதிக்குள் 8,275 படுக்கைகள் தயார்நிலையில் இருக்கும்.

இந்த விஷயத்தில் மருத்துவக்குழு இரவு பகலாக உழைத்து வருகிறோம். நோய் உறுதியான உடனேயே ஆஸ்பத்திரிகளுக்கு பதற்றத்துடன் மக்கள் வந்துவிட வேண்டாம். கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 ஸ்கீரினிங் சென்டர் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த ஸ்கீரினிங் சென்டரில் ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுக்கப்பட்டு பாதிப்புமிக்கவர்கள் சிகிச்சை மையங்களுக்கும், பாதிப்பு குறைந்தவர்கள் வீட்டு தனிமைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதிக நோய் தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் பொருத்தப்பட்ட படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தை அரசே மக்களுக்கு வழங்கிவருகிறது. ஆனால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒருவாரத்துக்கு நமக்கு 59 ஆயிரம் ‘வயல்’ அளவிலான மருந்துகள் மட்டுமே வருகின்றன. தினமும் நமக்கு 3 ஆயிரம் என்றாலும், 18 ஆயிரம் டோஸ்கள் தான் வரும். ரெம்டிசிவிர் ஒரு மாயஜால மருந்து கிடையாது. எல்லாருக்கும் அது தேவை அல்ல.

‘ரெம்டெசிவிர் இல்லையென்றால் உயிர் போய்விடும், அதை வாங்கி வாருங்கள்’, என்று அழுத்தம்தந்து டெல்லி மருத்துவக்குழு, தமிழக மூத்த மருத்துவக்குழு வகுத்துள்ள விதிமுறையை மீறி தனியார் ஆஸ்பத்திரிகள் தொடர்ந்து மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தவறான தகவல்களை பரப்பவேண்டாம். தேவையானவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை தமிழக அரசு நிச்சயம் வழங்கும். ஏனெனில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த மருந்துகள் தேவை. அதுவும் பாதிப்பின் அளவை பொறுத்து அது முடிவுசெய்யப்படும். எனவே தனியார் ஆஸ்பத்திரிகள் இந்த மருந்துக்காக மக்களை கட்டாயப்படுத்த கூடாது. அடுத்த 10 நாட்கள் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

முக கவசம் அணியுங்கள்

வடமாநிலங்கள் போல தமிழகத்திலும் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த நிலையை நாம் தவிர்க்க முக கவசம் கட்டாயம் அணியவேண்டும். தடுப்பூசி ஒருபுறம் என்றால், முக கவசம் கட்டாயம் அணியவேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்லவேண்டாம். இதை முறையாக கடைபிடித்தால் டெல்லி, மராட்டியம் போன்ற நிலை தமிழகத்துக்கு ஏற்படாது.

எனவே நாம் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை முழுமையாக மதிக்கவேண்டும். அந்த பகுதி மக்கள் வெளியே செல்லாதவாறும், புதிதாக யாரும் செல்லாதவாறும் நாம் தீவிரமாக கண்காணித்தால் ஓரளவு நிலைமை கட்டுப்படுத்தப்படும்.

கடந்த வாரம் 356 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். நாளை (இன்று) 900 பட்டதாரி மாணவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஏற்கனவே 1,500 மினி கிளினிக் மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை போன்ற இடங்களில் அதிக செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தனியார் மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவர்களை கூட பணியமர்த்தும் நிலை உள்ளதால் செவிலியர்களை வரவேற்கிறோம். உடனடியாக அவர்களுக்கு பணி ஆணையும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஆன்-லைன் வசதி

அதனைத்தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படுமா?

பதில்:- இந்த வார இறுதிக்குள் ரெம்டெசிவிர் மருந்துகளை மக்களுக்கு பரவலாக வழங்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- அரசு-தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இருப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிறதே?

பதில்:- அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதிகள் எவ்வளவு? என்பதை ஆன்-லைன் மூலமாக தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னோட்ட பணிகள் முடிந்து முடிவு திருப்தியாக அமைந்தால் நாளை (இன்று) காலை கூட இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவோம்.

ஆதாரமற்ற தகவலை நம்பவேண்டாம்

கேள்வி:- தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதா?

பதில்:- ஒவ்வொரு நாளும் தேவையின் அளவு அதிகரித்து வருகிறது. போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சமூக வலைத்தளத்தில் வெளியாகும் ஆதாரமற்ற தகவலை பொதுமக்கள் நம்பவேண்டாம்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்