கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 4-வது நாளாக குவிந்த பொதுமக்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க 4-வது நாளாக பொதுமக்கள் குவிந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2021-04-30 03:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ‘ரெம்டெசிவிர்’ மருந்தை டாக்டர்களால் அதிகளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், டாக்டர்கள் இந்த மருந்தை வெளியே வாங்கி வர பரிந்துரை செய்தனர். அந்த மருந்து சீட்டை பெற்று கொண்டு பொதுமக்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைந்தனர்.

கால் கடுக்க காத்திருந்த மக்கள்

மேலும் இந்த மருந்து கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால் தமிழக மருத்துவ பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்தை அரசே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர் கடந்த 26-ந்தேதி முதல் திறக்கப்பட்டு ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவைப்படுவோருக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ விற்பனை செய்யப்படுகிறது என அறிந்த மக்கள் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். மேலும், அங்கு நாள் முழுவதும் நீண்டவரிசையில் கால் கடுக்க பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

கூடுதல் கவுண்ட்டர்

இந்த சிறப்பு கவுண்ட்டர் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படுவதால், பலர் நீண்ட நேரம் காத்திருந்து வாங்க முடியாத சூழ்நிலை நிலவியது. அவர்களை சுகாதாரத்துறையினர் மறுநாள் வந்து பெற்று கொள்ளுமாறு டோக்கன் கொடுத்து 2 நாட்களாக திருப்பி அனுப்பி வைத்தனர். ஆனால் டோக்கன் முறையில் பல குளறுபடிகள் நிலவியதால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருந்து வினியோகம் செய்யும் கவுண்ட்டர் வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் கவுண்ட்டர் திறக்கப்பட்டது. பொதுமக்கள் வருகை அதிகமாக இருப்பதால், கூடுதலாக ஒரு கவுண்ட்டர் என 2 கவுண்ட்டர்கள் நேற்று திறக்கப்பட்டது.

4-வது நாளாக...

மேலும் விரைவில் அனைத்து மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் 4-வது நாளான நேற்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க வந்திருந்த பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் குவிந்தனர்.

காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி அனுப்பினர். ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு பொதுமக்கள் குவிந்ததால், பர்னபி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து சரி செய்யும் பணி

இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மருத்து வாங்கும் இடத்தில் சலசலப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, 50 நபர்களாக உள்ளே போலீசார் அனுமதித்தனர். மற்றவர்கள் சாலையோரம் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

பல மணி நேரம் காத்திருந்து பொதுமக்கள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை வாங்கி சென்றனர். மாலை 5 மணிக்கு பிறகு கவுண்ட்டர்கள் அடைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்