தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி - தொல். திருமாவளவன்

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-03 07:48 GMT
கோப்புப்படம்
சென்னை, 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் வியூகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கின்றது.. கலைஞருக்கு பின்னால் கட்சியை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி வருகின்ற ஸ்டாலின் அவர்கள், கூட்டணியையும் சிதறவிடாமல் கட்டுக்கோப்பாக வழிநடத்தி, மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார். 

6வது முறையாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி கட்டிலில் ஏறுகிறது. ராஜதந்திரத்தில் வல்லவர், ஆளுமை மிக்கவர் என்பதை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்குவதே தனது லட்சியம் என்று பிரகடனப்படுத்தியிருக்கிறார். தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்டாலின் சந்திக்கக்கூடிய முதல் சவால் கொரோனா. மேலும் திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கின்றனர். அவர்களின் மதவாத அரசியல், வெறுப்பு அரசியல், சதி முயற்சிகள் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் எடுபடவில்லை.

அவர்களை பொதுமக்கள் மண்ணை கவ்வ வைத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியையும், அதிமுகவையும் பயன்படுத்தி அவர்களின் முதுகிலே ஏறி சவாரி செய்து, பெரிய அரசியல் சக்தியாக வலிமை பெற வேண்டும் என்று கணக்குப்போட்ட பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கிறது. தமிழ்நாடு சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள். 

10 நாள் இடைவெளியில் புதிய சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாதிய மதவாத சக்திகள் பரப்பிய அவதூறுகளை தாண்டி, பொருளாதார வலிமையும் இன்றி, 4 தொகுதிகளில் பானை சின்னத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். இரண்டு பொதுத்தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலும் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறோம். நல்லாட்சியை வழங்க ஸ்டாலினுக்கு விசிக முழு ஒத்துழைப்பு வழங்கும்” என்று தொல். திருமாவளவன் கூறினார். 

மேலும் செய்திகள்