எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் ப.சிதம்பரம் பேட்டி

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடரானதுதான் அ.தி.மு.க. தோற்க காரணம் என ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2021-05-03 21:12 GMT
காரைக்குடி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப்பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும். அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுகள்.

வாக்கு வித்தியாசம்

அசாம் காங்கிரசில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைமுறையினர் சிறப்பாக பணியாற்றி பெரும் சவால்களுக்கு இடையே நல்ல இடங்களை கைப்பற்றி உள்ளனர்.

கேரளாவில் காங்கிரசுக்கு பெரிய தோல்வி போல சித்தரிக்கப்படுகிறது. தோல்வியை மறுக்கவில்லை. ஆனால் வாக்கு வித்தியாசம் 0.8 சதவீதமே.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தேர்தல் செயல்பாடுகளில் குறைவாகவோ, எதிராகவோ செயல்பட்டவர்களை கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

அ.தி.மு.க. தோல்விக்கு காரணம்

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

விவசாயிகள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டார்கள். பொல்லாத வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு விவசாயிகள், எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து விவசாயிகளுக்கு தேவையான ஆதரவான புதிய சட்டம் கொண்டு வந்தால் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்