முதல்-அமைச்சராகும் மு.க.ஸ்டாலின்: நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் தொண்டர்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக இருப்பதால் நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-03 21:17 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா(வயது 32).

தி.மு.க. தொண்டரான இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானால் தனது நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்துவதாக பரமக்குடி முத்தாலம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதுடன், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்க இருப்பதால், வனிதா தனது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று காலை முத்தாலம்மன் கோவிலுக்கு வந்தார். ஆனால் கோவில் பூட்டப்பட்டிருந்தது.

நாக்கை அறுத்தார்

இருப்பினும் தனது காணிக்கையை செலுத்த வேண்டும் என்பதற்காக வனிதா திடீரென கத்தியால் நாக்கை அறுத்து கோவில் படியில் வைத்துள்ளார். ரத்தம் கொட்டியதால் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே வனிதா மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வனிதாவை தூக்கினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனிதாவை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் துண்டாகி கிடந்த நாக்கையும் போலீசார் எடுத்துச் சென்றனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்