அம்மா உணவக பெயர் பலகை நீக்கம்: திமுக தொண்டர்கள் இருவர் நீக்கம் - திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

அம்மா உணவக பெயர் பலகை நீக்கப்பட்ட சம்பவத்தில் திமுக தொண்டர்கள் இருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Update: 2021-05-04 09:14 GMT
சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இந்த சூழலில் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இதனைத்தொடர்ந்து, மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தனது டுவிட்டரில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்…” என்று பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், “அம்மா உணவக பெயர் பலகையை அகற்றிய இருவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான இருவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட இருவரும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. இருவர் மீதும் காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்