இன்று முதல் 20-ந் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் தமிழக அரசு அறிவிப்பு

இன்று முதல் 20-ந் தேதிவரை அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-05-05 19:58 GMT
சென்னை, 

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 6-ந் தேதி (இன்று) அதிகாலை 4 மணியில் இருந்து 20-ந் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.

அதன்படி, 6-ந் தேதி (இன்று) முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அனைத்துத் துறை தலைவர்களும், அதாவது துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் போன்ற தலைமை அதிகாரிகள், ஊழியர்களின் வருகைப் பதிவேடு ஒன்றை தயார்செய்ய வேண்டும்.

வேலைப்பளுவுக்கு ஏற்ப...

3 நாட்களுக்கு 50 சதவீத அலுவலர்கள் பணியாற்ற வேண்டும், அடுத்த 3 நாட்களுக்கு அடுத்த 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைக்கலாம். அல்லது வேலைப்பளுவின் தேவைக்கு ஏற்ப ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.59 ஆயிரத்து 300 முதல் 1 லட்சத்து 28 ஆயிரத்து 900 வரையிலும், ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 700 முதல் ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் வரை சம்பளம் பெறும் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் அனைத்து தலைமையக அலுவலக அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

ஊரைவிட்டு வெளியேறக்கூடாது

துறை தலைமையகங்களில் அரசுக் கோப்புகளை ஒப்படைப்பதில் புதிய நடைமுறையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அனைத்து அதிகாரிகளும், அலுவலர்களும் எப்போதுமே அரசுப் பணிகளை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

அவர்கள் யாரும் தலைமையகத்தைவிட்டு அனுமதி இல்லாமல் வெளியேறக் கூடாது. மின்னணு வழியில் தொடர்புகொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

தலைமைச்செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகங்கள் வரை இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். 20-ந் தேதிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்