புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் பஸ், மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம்

அரசின் உத்தரவுப்படி, பஸ்கள், புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அலுவலக நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பஸ்கள், ரெயில்கள் காற்று வாங்கின.

Update: 2021-05-07 00:05 GMT
சென்னை, 

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் நோய் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தநிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை அரசு கடந்த 3-ந்தேதி வெளியிட்டது. அதன்படி, 6-ந்தேதி (நேற்று) காலை 4 மணி முதல் 20-ந்தேதி காலை4 மணி வரை அந்த புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தவகையில், பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் மற்றும் அரசு பஸ்கள், வாடகை டாக்சிகள் ஆகியவற்றில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

மின்சார ரெயில்கள்

அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மின்சார ரெயில்களை இயக்கும் தெற்கு ரெயில்வே நேற்று முன்தினம் ரெயில்களில் பயணிக்கும் பயணிகள் தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்தது. 50 சதவீத பயணிகள் பயணிப்பதை உறுதி செய்யும் வகையில், முன்களப்பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களை தவிர பொதுமக்கள் யாருக்கும் பயணிக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தது.

அந்த அறிவிப்பின்படி, புறநகர் மின்சார ரெயில்களில் நேற்று 50 சதவீத அளவிலேயே பயணிகள் பயணித்தனர். இந்த அறிவிப்பு தெரியாமல் பயணித்த பொது மக்களிடம் அது பற்றி தெரிவித்து ரெயில் நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டன. அதேபோல், மெட்ரோ ரெயில்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பஸ்கள் காற்று வாங்கின

பஸ்களை பொறுத்தவரையில், ஏற்கனவே இருக்கைகளில் அமர்ந்தபடி மட்டும் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது 50 சதவீத பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி, தொடர்ச்சியாக ஒரே வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கூட்டம் இல்லாமல் ஒவ்வொரு பஸ்களிலும் பயணிகள் பயணித்தனர்.

அவ்வாறு பஸ்களில் பயணிகள் அதிகமாக இருந்த நேரத்தில் ஒவ்வொரு பஸ்நிலையங்களை கடக்கும் போதும், டிரைவர் மற்றும் கண்டக்டர் தொடர்ச்சியாக பஸ்கள் வருகிறது, அதில் ஏறி பயணம் செய்யுங்கள் என்று பயணிகளிடம் கனிவோடு தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது.

இதனால் அலுவலக நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் பஸ்கள், ரெயில்களில் பயணிகள் குறைந்த அளவிலேயே பயணித்தனர். அதிலும் குறிப்பாக பிற்பகல் நேரத்தில் பஸ்கள், ரெயில்களில் ஓரிரு பயணிகளுடன் காலியாக சென்றன.

மேலும் செய்திகள்