தேவையுள்ள இடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

தேவையுள்ள இடங்களை கண்டறிந்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

Update: 2021-05-09 00:31 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நாளை முதல் 24-ந் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊருக்கு திரும்புபவர்களுக்கு வசதியாக நேற்றும், இன்றும் தமிழக அரசு சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்ப்பது அரசின் கடமையாகும். அதற்காக 2 நாட்கள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 50 சதவீத பயணிகள் என்ற நடைமுறை அனைத்து பஸ்களிலும் பின்பற்றப்படும். அதில் மாற்றம் இருக்காது. எந்த பகுதிகளுக்கு கூடுதலாக செல்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

தேவையுள்ள இடங்களில் பஸ்கள் இயக்கப்படும்

கொரோனா காலம் என்பதால், நிலைமைக்கு ஏற்றாற்போல் ஏற்பாடு செய்யப்படும். மக்கள் கூட்டம் கூடாமல் அவர்களை பத்திரமாக சொந்த ஊரில் சேர்ப்பது அரசின் கடமையாகும். அதை போக்குவரத்து துறை செய்யும். மேலும், அரசு நகர சாதாரண பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு மானியமாக ரூ.1,200 கோடி தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் பஸ்களின் தேவையுள்ளதோ, அதை அறிந்து முதல்-அமைச்சருடன் கலந்து பேசி கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்