அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமனம் தமிழக அரசு உத்தரவு

தமிழக அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2021-05-09 22:44 GMT
சென்னை, 

மாநில அட்வகேட் ஜெனரல் பதவி முக்கியமானதாகும். இப்பதவியில் நியமிக்கப்படும் மூத்த வக்கீல், மாநில அரசுகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனை வழங்குவதுடன், தலைமை வக்கீலாகவும் செயல்படுவார்.

அந்த வகையில், அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

நெல்லை மாவட்டம்

இந்த நிலையில் காலியாக இருக்கும் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளார். மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், திமுக ஆட்சி காலத்தில் 1989-91-ம் ஆண்டுகளில் கூடுதல் குற்றவியல் வக்கீலாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீலாக பதவி வகித்தவர்.

1953-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் எஸ். ராஜகோபால், ரங்கநாயகி ஆவர்.

ஜெயின் கமிஷன்

இவரது தந்தை மதுரை மாவட்ட அரசு குற்றவியல் வக்கீலாக பதவி வகித்தவர்.

மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் சட்டப் படிப்பை முடித்துவிட்டு, 1977-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். மூத்த வக்கீல் என்.நடராஜனிடமும், தந்தை எஸ்.ராஜகோபாலிடமும் ஜூனியராக பணியாற்றினார்.

இவர் ஏராளமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதம் செய்துள்ளார். ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் ஆஜராகி வாதம் செய்த அனுபவம் கொண்டவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷனில், இவர் தமிழக அரசின் சார்பில் வக்கீலாக ஆஜராகி வாதம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்