கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண் டாக்டர் பலி

கொரோனா பாதிப்பால் கர்ப்பிணி பெண் டாக்டர் உயிரிழந்தார். மக்கள் மருத்துவராக பணிபுரிந்தவர் என்று கிராம மக்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

Update: 2021-05-10 03:12 GMT
தேனி, 

மதுரையை அடுத்த அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகப்பிரியா (வயது 32). இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். அதிலும், பலியான சண்முகப்பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் நன்மதிப்பு

இறந்துபோன சண்முகப்பிரியாவின் பூர்விகம் மதுரையாக இருந்தாலும், அவர் பிறந்து, வளர்ந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமம் ஆகும்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் படித்து டாக்டரானார். அதன்பிறகு அவர், சின்னமனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு டாக்டராக நியமிக்கப்பட்டார். கடந்த 8 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி, சின்னமனூர் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையாற்றினார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று மக்கள் மருத்துவராக சண்முகப்பிரியா விளங்கி வந்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ், தினகரன் இரங்கல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘டாக்டர் சண்முகப்பிரியா கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். 8 மாதங்களாக கருவுற்றிருந்த நிலையிலும், கொரோனா அச்சத்தை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்றியவர் அவர். அவருக்கு எனது வீரவணக்கம்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கொரோனாவால் இறந்த டாக்டர் சண்முகப்பிரியாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்