16-வது சட்டசபையின் முதல் கூட்டம்: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் 2 அமைச்சர்கள் உள்பட 10 பேர் பொறுப்பேற்கவில்லை

16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 2 அமைச்சர்கள் உள்பட 10 பேர் பொறுப்பேற்கவில்லை.

Update: 2021-05-12 04:01 GMT
சென்னை, 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 16-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்கள் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் எம்.எல்.ஏ.க்கள் பொறுப்பு ஏற்றனர்.

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

தொடக்கத்தில் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசும்போது, ‘‘16-வது சட்டசபை உறுப்பினர்களாக தேர்வு பெற்று, முதல் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். தற்காலிக சபாநாயகராக என்னை நியமனம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பேரவை உறுப்பினர்களாக மக்கள் தேர்வு செய்யப்பட்டு இங்கே வந்திருக்கிறோம். முதலாவதாக, இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபை செயலாளரிடம் வழங்க வேண்டும்’’ என்றார்.

அதன்பின்னர், ஒவ்வொருவராக எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக்கொண்டனர். முதலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டசபை செயலாளர் சீனிவாசனின் வழங்கினார். அதன்பின்னர், உறுதிமொழியை வாசித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

அப்போது, ‘‘சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான், சட்டமுறைப்படி நிறுவப்பெற்றுள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளுகிற கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்’’ என்றார். அதன்பின்னர், உறுதிமொழி படிவத்தில் அவர் கையெழுத்திட்டு சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார்.

அவரை தொடர்ந்து, அமைச்சர்களும், அதன்பின்னர், முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் எம்.எல்.ஏ. பதவியை ஏற்றுக்கொண்டனர். எடப்பாடி பழனிசாமி பதவியேற்க வந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

223 பேர் பதவியேற்றனர்

அதன்பின்னர், பிற கட்சியின் சட்டமன்ற தலைவர்கள் பொறுப்பேற்றனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும், அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒன்றன்பின் ஒன்றாக பதவி ஏற்றுக்கொண்டனர். மொத்தம் 223 பேர் பதவி ஏற்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் பொறுப்பேற்கவில்லை. இதேபோல், தி.மு.க. உறுப்பினர்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சண்முகையா (ஒட்டப்பிடாரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), வெங்கடாச்சலம் (அந்தியூர்) ஆகியோர் பதவியேற்கவில்லை.

அ.தி.மு.க.வில் 4 பேர் பதவியேற்கவில்லை

அ.தி.மு.க. தரப்பில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் பதவியேற்கவில்லை.

இறுதியாக பேசிய தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, ‘‘சட்டசபையில் இன்று பதவியேற்காத உறுப்பினர்கள் 12-ந்தேதி (இன்று) பதவியேற்றுக்கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார். அத்தோடு நேற்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

சபாநாயகர் இன்று பதவியேற்பு

இன்று (புதன்கிழமை) சட்டசபை மீண்டும் கூடுகிறது. சபாநாயகராக மு.அப்பாவுவும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் பொறுப்பேற்க இருக்கின்றனர். சபாநாயகர் இருக்கையில் மு.அப்பாவுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர வைப்பார்கள்.

அதன்பின்னர், சபாநாயகர் மு.அப்பாவு தொடர்ந்து அவையை நடத்துவார்.

மேலும் செய்திகள்