சென்னையில் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2021-05-17 10:25 GMT
சென்னை,

பொது மக்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரேஷன் கார்டு வாரியாக தலா ரூ.4 ஆயிரம் வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்கள் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்கும் வகையில் தேதி வாரியாக வருவதற்கான டோக்கன் கடந்த 10-ந் தேதி வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் தொடங்கியது.

ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் குறிப்பிட்ட தேதிக்கு வருமாறு டோக்கன் வழங்கப்பட்டவர்கள் தங்களது ஸ்மார்ட் கார்டு மற்றும் டோக்கன் ஆகியவற்றுடன் ரேஷன் கடைகளுக்கு வந்தனர். அங்கு அவர்கள் நீண்ட வரிசயைில் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டு, ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. நேற்று கொரோனா தடுப்பு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவிரி நகர் 1 வது தெருவில் எண் 24, 25 ஆகிய இரண்டு ரேஷன் கடைகள் இருக்கின்றன. இதில் 24, 25 ஆகிய இரண்டு கடையில் நேற்று இரவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருள் வழங்கல் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பணத்தை கொள்ளை அடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்