காங்கிரஸ் மூத்த தலைவர் காளியண்ணன் கவுண்டர் கொரோனா தொற்றால் மரணம் அரசியல் தலைவர்கள் இரங்கல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ணன் கவுண்டர் கொரோனா தொற்று காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101. அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Update: 2021-05-28 21:02 GMT
சேலம்,

சுதந்திர போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.எம்.காளியண்ணன் கவுண்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார்.

அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகும். அவரது உடல் நேற்று இரவு அரசு மரியாதையுடன் திருச்செங்கோடு நகர மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்துநல்லி கவுண்டர்-பாப்பாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1921-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி காளியண்ணன் கவுண்டர் பிறந்தார். இவர் தனது தகப்பனார் காலத்திலேயே நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு இடம் பெயர்ந்தார்.

அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்

காளியண்ணன் கவுண்டர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் பட்டமும், லயோலா கல்லூரியில் எம்.ஏ. பட்டமும் பயின்றார். சிறு வயது முதலே மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட காளியண்ணன் கவுண்டர், திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றினார்.

காளியண்ணன் கவுண்டர் தனது 19-வது வயதில் இந்திய தேசிய காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். தனது 28-வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தில் (1950-52) உறுப்பினராக இருந்தார். இவர் ராசிபுரம் தொகுதியில் ஒரு முறையும் (1952), திருச்செங்கோடு தொகுதியில் 2 முறையும் (1957, 1962) எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். எம்.எல்.சி. யாகவும் பதவி வகித்து உள்ளார்.

2 ஆயிரம் பள்ளிக்கூடங்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் அலங்கரித்து உள்ளார். இவர் 1954 முதல் 1957 வரை ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவராக இருந்த போது, 2 ஆயிரம்பள்ளிக்கூடங்களை திறந்து வைத்த பெருமைக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.

இவர் தனது நிலத்தில் பெரும்பகுதியை ஏழை - எளியவர்களுக்கு வழங்கி உள்ளதுடன், பள்ளிக்கூடங்கள் திறப்பதற்காகவும் தனது நிலத்தை அதிக அளவில் தானமாக வழங்கி உள்ளார். பெண் கல்வி, பெண்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட இவர் 1954 முதல் அவ்வை கல்வி நிலையம் என்ற இலவச பள்ளியை திருச்செங்கோட்டில் நடத்தி வந்துள்ளார்.

ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம்

மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பணியாற்றிய டி.எம்.காளியண்ணன் கவுண்டர், தான் ஒரு ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்திற்கு ஆதரவாக சட்டசபையில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.எம்.காளியண்ணன் கவுண்டருக்கு பார்வதி அம்மாள் என்ற மனைவியும், டி.கே.ராஜேஸ்வரன், டி.கே. கிரி என 2 மகன்களும், டி.கே. சாந்தகுமாரி, டி.கே.வசந்தகுமாரி, டி.கே.விஜயகுமாரி என 3 மகள்களும் உள்ளனர். இதில் இளைய மகன் டி.கே.கிரி மட்டும் ஏற்கனவே காலமாகிவிட்டார்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் டி.எம்.காளியண்ணன் கவுண்டர் மரணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

இளம் வயதில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினராக இருந்தவரும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பழம்பெரும் தலைவருமான திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் தனது 101-வது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை லயோலா கல்லூரி வாழ்க்கையின் போதே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர் - தேசத்தந்தை மகாத்மா காந்தியுடன் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று 12 நாட்கள் தங்கியிருந்தவர். தன்னை ஒரு காந்தியவாதியாக மாற்றிக் கொண்டு எளிமையின் இலக்கணமாக இறுதிவரை வாழ்ந்தவர்.

மக்களாட்சி மாண்புகளின் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்த அவர் - கஸ்தூரிப்பட்டி ஜமீன்தாராக அழைக்கப்பட்ட போதும் - ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்திற்கு சட்டமன்றத்தில் ஆதரவளித்து - வாக்களித்து, ஜமீன் முறை ஒழிப்பிற்குத் தனது முழு ஒத்துழைப்பை அளித்த மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

சென்னை மாகாணத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் - ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அரும்பணியாற்றிய காளியண்ண கவுண்டரின் மறைவு தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் இயக்கத் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதவில் கூறியிருப்பதாவது:-

டி.எம்.காளியண்ணன் இந்திய திருநாட்டின் முதல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றளவும் வாழ்ந்தவர்.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் 2,000 பள்ளிகளுக்கு மேல் திறந்தவர், விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றவர், டி.எம்.காளியண்ணன் இயற்கை எய்தினார் எனும் செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

அண்ணாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி பெருந்தலைவர் காமராஜரின் அடியொற்றி பயணித்தவர் டி.எம்.காளியண்ணன். பொதுவாழ்க்கையில் எளிமையாக, நேர்மையாக, துணிவுடன் கருத்துக்களை கூறுபவராக விளங்கியவர். இவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் அமைச்சர் பொன்னையன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்