தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-30 04:44 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஜனவரி மாதத்தில் பனிக்காலம் இருக்கும். அதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் இருந்து வெயில் காலம் தொடங்கும். தொடர்ச்சியாக 2 மாத காலம் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் ஆரம்பித்து, 28-ந் தேதியுடன் முடிவடையும்.

இந்த 24 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் பல இடங்களில் வெயில் அளவு சாதாரணமாக கோடை காலத்தில் பதிவாகும் அளவை விட அதிகமாக இருக்கும். அதிகபட்சமாக 115 டிகிரியையும் தாண்டி வெயில் கொளுத்தும். அந்தவகையில் வாட்டி வதைக்கக்கூடிய அக்னி நட்சத்திரம் நேற்றுடன் விடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கிழக்கு திசை காற்று அதிகளவில் தமிழகத்தின் பல பகுதிகளில் வீசியதால், வெப்பநிலை உயரவில்லை, வெயிலின் தாக்கமும் அதிகளவில் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று தாமதமாக மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று தற்போது வீசத்தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக இனி வரக்கூடிய 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும், ஒருவேளை பருவமழை தொடங்க சற்று தாமதம் ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்