தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து: மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

Update: 2021-06-06 20:04 GMT
சென்னை,

விஜயகாந்த், ஜி.கே.வாசன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

பிளஸ்-2 தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்பம் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே இருந்து வந்தது. கொரோனா பரவல் காரணமாக இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைவரது கருத்தாக இருந்தது. அதனை ஏற்று பிளஸ்-2 தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை தே.மு.தி.க. வரவேற்கிறது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் மாணவர்கள், பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் அரசு அமைக்கவுள்ள குழு, மிகத் துல்லியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு மாணவர்கள் கனவை நனவாக்க உத்தரவாதம் கொடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.

முத்தரசன், அருணன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

பல்வேறு நிலைகளில் ஆலோசித்து பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிட குழு அமைத்து பரிந்துரை கேட்டிருப்பதும் தமிழக அரசின் நல்ல அணுகுமுறையாகும். அதேவேளை ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சா.அருணன்:-

கொரோனா சூழலை கருத்தில்கொண்டு பிளஸ்-2 தேர்வை தமிழக அரசு ரத்து செய்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். அதேபோல ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவேண்டும்.

இதேபோல அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிளஸ்-2 தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்