மாவட்டங்களுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்

தமிழகத்தில் அமல்படுத்தப்படும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2021-06-06 23:01 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

பால், குடிநீர் செய்தித்தாள் தடையில்லை

ஊரடங்கின் போது மருந்து கடைகள், பால், குடிநீர், செய்தித்தாள் வினியோகத்திற்கு தடையில்லை. பொது வினியோக கடைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு வினியோகம் அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள், உணவு விடுதிகள், பேக்கரிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் பகல் 3 மணி வரையிலும்; மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரையிலும் அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து இ-வர்த்தகம் மூலமாக நடக்கும் உணவு வினியோகம் இந்த நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும். மற்ற வகை இ-வர்த்தக சேவைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்படலாம்.

மொத்த விற்பனை சந்தைக்கு அனுமதி

கோயம்பேடு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள காய்கறி, பழங்கள், பூ மொத்த விற்பனை சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. மொத்த விற்பனை சந்தைகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுமதி இல்லை.

ரெயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் இயங்கலாம். அங்கு சரக்கு கையாளுதல், குளிர்பதன கிடங்குகள் சேவைகள் பெட்டக முனையங்களின் இயக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. அடிப்படை அத்தியாவசிய உள்கட்டமைப்பு பிரிவுகளான எரிசக்தி, குடிநீர் வழங்கல், துப்புரவு பணி, தொலை தொடர்பு, தபால் சேவைகள் அனுமதிக்கப்படுகின்றன. அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் இயங்கலாம்.

இயங்கும் அலுவலகங்கள்

அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய், காவல், தீயணைப்பு, சிறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், அரசு அச்சகம், உணவு, கூட்டுறவு, உள்ளாட்சி மன்றங்கள், வனம், கருவூலம், சமூகநலத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, இயற்கை பேரிடர் ஆகிய துறைகளின் அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் இயங்கும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படலாம். ஏ.டி.எம். மற்றும் அதுதொடர்பான வங்கி சேவைகளுக்கு அனுமதி உண்டு.

ரத்த வங்கிகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு அனுமதி உண்டு. அவசர பயணங்களுக்காக விசா வழங்கும் நிறுவனங்கள், குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்கலாம். அவர்கள் அலுவலகத்திற்கு வரும்போது தங்களின் நிறுவன அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

சரக்கு வாகனங்களுக்கு அனுமதி

ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டோர், மூத்த குடிமக்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பெண்கள், விதவைகள் இல்லங்கள் மற்றும் அதன் தொடர்புடைய பயணங்கள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். கண்காணிப்பு இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறுவர்கள் பாதுகாப்பு ஆகிய பணிகளில் உள்ள ஊழியர்கள், அடையாள அட்டை அல்லது இ-பதிவுடன் செல்லலாம். விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய பணிகள், வேளாண் பொருட்களை எடுத்துச் செல்லுதல் ஆகியவை அனுமதிக்கப்படுகின்றன.

கோழிப்பண்ணைகள் உள்ளிட்ட கால்நடை பண்ணை செயல்பாடுகள், கால்நடை மருத்துவ பணிகளுக்கு அனுமதி உண்டு. கால்நடை மருந்து கடைகள், கால்நடைகளுக்கான உணவு விற்பனை கடைகள் திறந்திருக்கலாம். சரக்கு வாகனங்கள் மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் சரக்குகளை கொண்டு செல்வது, ஏற்றி இறக்குவது அனுமதிக்கப்படுகிறது.

இ-பதிவு விவரங்கள்

ரெயில், விமான நிலையங்களுக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும், அங்கிருந்து வீட்டிற்கு வரும்போதும், பயணத்திற்காக செய்யப்பட்ட இ-பதிவு விவரங்கள், பயணச்சீட்டு, அடையாள சான்று ஆகியவை இருந்தால்தான் அனுமதி கிடைக்கும். தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ள நிறுவனங்கள், அவற்றுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனங்களின் பணியாளர்கள் பேருந்து, வேன், டெம்போ. கார் போன்ற 4 சக்கர வாகனங்களில், நிறுவனங்கள் வழங்கும் இ-பதிவுடன் வந்து செல்ல வேண்டும். இந்த 8 மாவட்டங்களில் ஏற்றுமதி ஆர்டர் பெற்றுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அதன் தொடர்புடைய நிறுவனங்கள் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்கி, ஏற்றுமதி தொடர்பான பணிகளையும், சாம்பிள்களை மட்டும் அனுப்பும் பணிகளையும் மேற்கொள்ளலாம்.

உத்தரவை மீறினால்....

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் தனியொருவர் செல்ல வேண்டும் என்றால், மருத்துவ அவசர காரியங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு மட்டும் இ-பதிவுடன் செல்லலாம். மாவட்டத்திற்கு உள்ளே மருத்துவ அவசர காரியங்கள், இறுதிச் சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் செல்லலாம்.

விமானம், ரெயில் மூலம் வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக https://eregister.tnega.org மூலம் இ-பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ந்து அமலில் இருக்கும். கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 14-ந் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி கிடையாது. இந்த உத்தரவை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் இதனை கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்