சென்னை சேத்துப்பட்டில் நடந்த சம்பவம்: போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் வக்கீலுக்கு சம்மன்

சென்னையில் போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் வக்கீலுக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2021-06-07 20:01 GMT
சென்னை,

சென்னை சேத்துப்பட்டு சிக்னல் அருகே ஊரடங்கையொட்டி தினமும் போக்குவரத்து போலீசாரும், சட்டம்-ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனை நடத்துவது வழக்கம். நேற்று முன்தினம் காலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பெண் ஒருவர் போக்குவரத்து போலீசாரை சாலை நடுவில் நின்று, கடும் ஆக்ரோஷமாக வாடா, போடா என்று திட்டி, மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்ட சம்பவம், சமூகவலை தளங்களில் வைரலானது.

இந்த வீடியோ தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் சேத்துப்பட்டு போலீசில் புகார் கொடுத்தனர்.

6 சட்டப்பிரிவுகளில் வழக்கு

இது தொடர்பாக உதவி போலீஸ் கமிஷனர் ராஜ்மோகன் மேற்பார்வையில், சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்துள்ளார். கொலை மிரட்டல், தரக்குறைவாக திட்டுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு உத்தரவை மீறுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்த பெண் தன்னை வக்கீல் என்று தெரிவித்தார். அது பற்றி போலீசார் விசாரித்தபோது, அவர் வக்கீலுக்கு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார் என்று தெரியவந்தது. அவரது பெயர் தனுஜா என்பதாகும். கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.

போலீசார் சம்மன்

இந்த நிலையில் போலீசாருடன் சண்டை போட்ட பெண் வக்கீலுக்கு சேத்துப்பட்டு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அந்த சம்மனில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்