தமிழக சட்டசபை இந்தமாதத்திற்குள் கூடும் வாய்ப்பு - அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்

தமிழக அரசின் முழு பட்ஜெட் சட்டசபையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

Update: 2021-06-09 09:11 GMT
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார்.

அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில் முழு பட்ஜெட்டை ஆகஸ்ட் மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய அரசு அமைந்துள்ளதால் சட்டசபையில் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்கப்பட வேண்டும். அதற்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடத்தப்பட வேண்டும்.

தற்போது கொரோனா தொற்று உள்ள சூழலில் ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகு ஊரடங்கில் மேலும் தளர்வுகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் விரைவில் சட்டசபையை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபையை கூட்ட வேண்டும் என்பதால் எந்த தேதியில் சட்டசபையை கூட்டலாம் என்பது பற்றி அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.

அநேகமாக இந்த மாதத்துக்குள் சட்டசபை கூட்டப்படும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தியதும் அதற்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் சட்டசபையில் பேசுவார்கள். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளிப்பார்.

அதன்பிறகு சபை ஒத்திவைக்கப்படும். பின்னர் அடுத்த (ஜூலை) மாதம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டசபை மீண்டும் கூடும். அப்போது தமிழக அரசின் முழு பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.

பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும், திட்டங்களும் இடம்பெறும்.

கொரோனா தொற்று இருக்கும் காலம் என்பதால் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகத்தில் கூட்டத்தை நடத்தாமல் கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் சட்டசபையை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சட்டசபை எந்த தேதியில் கூடும் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்