முன்களப்பணியாளர்களுக்கு 1 லட்சம் முககவசம் வழங்கும் திட்டம் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

பா.ஜ.க. அலுவலகத்தில் முன்களப்பணியாளர்களுக்கு ஒரு லட்சம் முககவசம் வழங்கும் திட்டத்தை எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-09 21:01 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில், விவசாய அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்காக 1 லட்சம் முககவசம் வழங்கும் திட்டத்தை, மாநிலத்தலைவர் எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு விவசாய அணி மாநிலத்தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமை தாங்கினார்.

முககவசங்கள் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆக்சிஜன் செறியூட்டிகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் விவகாரம்

தமிழக பா.ஜ.க சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகிறோம். முன்களப்பணியாளர்களுக்கு 1 லட்சம் முககவசம் வழங்கப்படுகிறது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம், மாதம் 1000 கொடுக்கிறோம் என்று அறிவித்திருந்தார்கள், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், உடனடியாக அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீட் விவகாரத்தில் மாணவர்களை அரசு குழப்பக் கூடாது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சிதான். பாரப்பட்சம் இன்றி அனைத்து கோவில் சொத்துக்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்