ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை என்ஜினீயர் கைது சி.பி.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை.

Update: 2021-06-10 20:59 GMT
சென்னை,

மதுரையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை மண்டல அலுவலகத்தில் நிர்வாக என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் வி.எல்.பாஸ்கர். மத்திய அரசு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் காண்டிராக்டர்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகையை அனுமதிக்க இவர், ரூ.50 ஆயிரம் லஞ்சமாக பெற்ற போது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்சப்பணத்தை கொடுத்த தனியார் நிறுவனங்களை சேர்ந்த பி.என்.சிவசங்கர் ராஜா, பி.நாராயணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து என்ஜினீயர் பாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில் பல்வேறு காண்டிராக்டர்களிடம் இருந்து பெறப்பட்டு தனித்தனி கவர்களில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

விசாரணைக்கு பின்பு, அவர்கள் 3 பேரும் மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்