நீட் தேர்வின் தாக்கம்: நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது.

Update: 2021-06-13 03:29 GMT
கோப்புப்படம்
சென்னை, 

நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்து கடந்த 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவில் 8 உறுப்பினர்கள் கடந்த 10ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். இதன்படி 

1. நீதிபதி  ஏ.கே.ராஜன் (ஓய்வு) - தலைவர்
2. டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் - உறுப்பினர்
3. டாக்டர் ஜவஹர் நேசன் - உறுப்பினர்
4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்
5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை - உறுப்பினர்
6. அரசு செயலாளர், சட்டத் துறை - உறுப்பினர்
7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உறுப்பினர்
8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் - உறுப்பினர்
9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு - உறுப்பினர் / செயலர் / ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை நடத்துகிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நாளை மதியம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்