தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்படுவதாக, தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Update: 2021-06-14 06:28 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்படுவதாக, தலைமை செயலாளர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஏ.கே.எஸ்.விஜயன் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாகவும், அவர் ஓராண்டு காலத்திற்கு இப்பதவியில் நீடிப்பார் என்றும், விரைவிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக செயல்பட்டார். டெல்லி பிரதிநிதியாக இருப்பவர் தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார். மாநில அரசின் கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை முன்பு எடுத்துவைப்பார். இங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்கள், கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகளைக் கவனிப்பார்.

தமிழ்நாடு அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் பெற்றவர். தலைமைச் செயலகத்துக்கு சென்று அரசு சம்பந்தப்பட்ட எந்தவொரு கோப்புகளையும் ஆய்வுசெய்ய முழு அதிகாரமும் இவருக்கு இருக்கிறது. தமிழ்நாடு அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கவனித்து வருவார்.

முன்னதாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை வரும் 17-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க நேரம் கேட்டு நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 



மேலும் செய்திகள்