சிவசங்கர் பாபா மீதான சர்ச்சை எதிரொலி; மாற்றுச்சான்றிதழை வாங்கிச் செல்லும் மாணவிகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-17 10:52 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். 

இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3 பேர் கொடுத்த புகார் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவசங்கர் பாபா மீதான வழக்கை செங்கல்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். டெல்லி கோர்ட்டில் நேற்று பிற்பகலில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதனையடுத்து அவரை விமானத்தில் சென்னை அழைத்து வர சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இரவோடு, இரவாக பாபாவை சென்னை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில், கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில், தொடர்ந்து நான்காவது நாளாக மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து தங்களது மாற்று சான்றிதழை வாங்கிச் செல்கின்றனர். சிவசங்கர் பாபாவின் மீதான சர்ச்சை அதிகம் வெளியான நிலையில் அவர் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். ஆனால் பள்ளியின் மீதான புகார்களால் அங்கு படித்து வந்த மாணவிகள் பலரும் பள்ளியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கடந்த 14 ஆம் தேதி முதல் மாற்று சான்றிதழை வாங்கிச் செல்லும் மாணவிகள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் வாங்கி செல்கின்றனர். இதுவரை 70 சதவீததிற்கு மேலானோர் பள்ளியை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் பிள்ளைகளின் கல்விக்கட்டனத்தை திருப்பி தருமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்