கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரம்

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-17 13:39 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் ெதால்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு 6-ம் கட்ட அகழ்வாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன. இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 7 ஆம் தேதி மீண்டும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இதில் பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, இரும்பாலான கத்தி, ஆணிகள், சுடுமண் முத்திரைகள், எடைக்கற்கள், சுடுமண் சக்கரம், சங்கு வளையள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்