கொரோனாவை ஒழிக்க மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளை தமிழகம் நன்கு அறியும் சட்டசபையில் மா.சுப்பிரமணியன் பேச்சு

எப்போதும் ஒரு கதாநாயகன் போன்று புன்சிரிப்பை உதிர்ப்பவர், மகிழ்ச்சியை மறந்தார் என்றும், கொரோனாவை ஒழிக்க மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும் என்றும் சட்டசபையில் மா.சுப்பிரமணியன் பேசினார்.

Update: 2021-06-22 20:26 GMT
சென்னை,

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) பேசினார். அப்போது அவர், கொரோனா தொற்று அதிகரிக்கும் வேளையில் தமிழக அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

நம்முடைய முதல்-அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் ஒரு கதாநாயகன் போன்று புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டு இருப்பார். அண்மை காலமாக அது இல்லையே என்று வினாவியபோது, அவர் சொன்னார் உண்மையில் எனக்கு சூட்டப்பட்டு இருப்பது மலர் கிரீடம் அல்ல, முள் கிரீடம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அரசு பொறுப்பை ஏற்று இருக்கிறோம்.

மகிழ்ச்சியாக இல்லை

பொறுப்பேற்ற நாளுக்கு முன்பு வரை அ.தி.மு.க. அரசுதான் காபந்து சர்க்கார். 7-ந் தேதி பொறுப்பேற்கிறோம். பொறுப்பேற்ற நாளில் தொற்று எண்ணிக்கை 26 ஆயிரத்து 465. இந்த அளவோடு பொறுப்பேற்றிருக்க நான் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றுதான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தார்.

10 நாட்கள் கழித்து 21-ந் தேதி தொற்று 36 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தபோது உண்மையிலே கவலை அடைந்தார். அதன்பின்னர் அவர் எடுத்த நடவடிக்கைகளை இந்த தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். பொறுப்பேற்பதற்கு முன்பாகவே அதிகாரிகளுடன் ஆலோசனை, பொறுப்பேற்ற அன்றே பிரதமருக்கு கடிதம், அதன் பின்னர் மீண்டும் ஒரு கடிதம். பிரதமருடன் நேரடியாக பேசினார். டி.ஆர்.பாலுவை டெல்லிக்கு அனுப்பி அவரை அங்கேயே முகாமிட செய்து, கொரோனா தொடர்பான குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவித்து தமிழகத்திற்கான தடுப்பூசிகளை பெற வழி நடத்தினார்.

மனசாட்சி உள்ளவர்கள் அறிவார்கள்

தடுப்பூசி மையங்கள் தமிழகத்திலேயே இருக்கிறது. செங்கல்பட்டில் உள்ள மையம் செயல்பட பிரதமரிடம் நம் முதல்-அமைச்சர் அனுமதி கோரினார். பொறுப்பேற்கும்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 26 ஆயிரத்து 465 இருந்தது. நேற்று 7,427 ஆக குறைந்தது. மிகப்பெரிய அளவிலான சரிவு. நிச்சயம் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த தொற்று முற்றுக்கு வரும் என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையே காரணம். இதை மனசாட்சி உள்ள எல்லோரும் நன்கறிவார்கள். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்