மு.க.ஸ்டாலினிடம் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் மனு

வாடகை கொடுக்க வழியில்லாமல் கஷ்டத்துடன் வாழும் தங்களுக்கு அரசு சார்பில் வீடு ஒன்றை ஒதுக்கித்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரையுலகில் புகழ்பெற்ற எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-06-28 21:17 GMT
முதல் சூப்பர் ஸ்டார்
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச்-ல் பிறந்தார். 1934-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.நடிகர், சினிமா தயாரிப்பாளர், கர்நாடக இசைப் பாடகர் என பன்முக திறமைகளைக் கொண்ட அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 14 தான். அவற்றில் 10 படங்கள், வசூலில் சாதனை படைத்த படங்களாகும். ஹரிதாஸ் திரைப்படம், தொடர்ந்து 3 
ஆண்டுகள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது.

கொலை வழக்கு
1944-ம் ஆண்டில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு சாதகமான தீர்ப்பைப் பெற்றாலும், அவரது திரை வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. 1959-ம் ஆண்டு நவம்பரில் சர்க்கரை நோய் காரணமாக 49 வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் செல்வச் செழிப்பில் திளைத்தார். இறுதி காலத்தை புனித யாத்திரை செல்வதிலும், கச்சேரிகளில் பாடுவதிலும் கழித்தார். அவ்வளவு செல்வங்களையும் செல்வாக்கையும் பெற்றிருந்தாலும் அவருடைய வாரிசுகளின் நிலை கவலையளிப்பதாக ஆகிவிட்டது.

கோரிக்கை
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவிற்கு எம்.கே.தியாகராஜ பாகவதரின் மகள் வயிற்றுப் பேரன் சாய்ராம் நேற்று வந்திருந்தார். அங்கு தனது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது தாத்தா எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு 2 மனைவிகள் இருந்தனர். 2-வது மனைவி ராஜம்மாள். அவர்களின் மகள் அமிர்தலட்சுமி - பாஸ்கர் ஆகிய தம்பதியின் மகன் நான். எனக்கு அண்ணன், தம்பி, தங்கை உள்ளனர். நாங்கள் 4 
பேரும் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் இல்லை. பாட்டிதான் எங்களை வளர்த்தார்.

பணக் கஷ்டம்
தற்போது எங்கள் குடும்பத்தினர் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். அனைவருமே சூளைமேட்டில் உள்ள அண்ணண் வீட்டில் வசிக்கிறோம். மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறோம். தங்கையின் கணவரும் இறந்துவிட்டார். நான் புகைப்பட கலைஞராகவும், வீடியோ படம் பிடிப்பவராகவும் இருந்தேன். அந்த உபகரணங்களை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தேன். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நானும் எங்கள் குடும்பத்தினரும் வேலையையும் இழந்துவிட்டோம். நான் செக்யூரிட்டி மற்றும் சமையல் வேலைகளுக்குச் சென்று வருகிறேன். எங்களால் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. எனவே வீட்டு வசதி வாரியத்தில் அரசு எங்களுக்கு ஒரு வீட்டை ஒதுக்கினால் அனைவருமே அங்கேயே வசிப்போம். எங்கள் வாழ்க்கைக்கு அது பேருதவியாக அமையும்.

கருணாநிதி உதவி
எங்கள் பாட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இன்றுவரை நன்றியுடன் அவரை நினைக்கிறோம். இன்று முதல்-அமைச்சராக அவரது வாரிசு மு.க.ஸ்டாலின் இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது கையினாலும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

நடிகர் சூர்யா உதவி
எங்களுக்கு முன்பு நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன் ஆகியோர் உதவிகள் செய்துள்ளனர். தற்போது தங்கை குழந்தையின் படிப்பு செலவுக்கு நடிகர் சூர்யா உதவுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்