தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் மீட்டராக மாற்றப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் மீட்டராக மாற்றப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Update: 2021-07-02 12:04 GMT
மதுரை

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மின் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

கடந்த ஆட்சி காலத்தில் 9 மாத காலம் மேற்கொள்ளாமல் இருந்த மின் பராமரிப்பு பணிகள் தற்பொழுது 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் புதிதாக மின் இணைப்பை பெறுபவர்களுக்கு மின் கம்பம் மின் மாற்றியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவு தொகையை மின் நுகர்வோரிடம் பெறும் நிலையை மாற்றப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கான மீட்டர் ஸ்மார்ட் மீட்டராக இருக்க வேண்டும் என்பதே முதல்- அமைச்சரின் இலக்கு. உற்பத்தியாகும் மின்சாரத்திற்கும் விநியோகமாகும் மின்சாரத்திற்கும் இடைவெளி அதிகமாக உள்ளதால் பல ஆயிரம் கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரி செய்ய மின் கணக்கீடு செய்யும் முறை ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்யப்பட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் முறையாக மாற்றம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக மின் வாரியத்தில் இழப்பை சரி செய்ய விரைவில் ஆய்வு செய்து சீர்திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் வாரியம் பெற்றுள்ள 1 லட்சத்து 59 கோடி கடனுக்கு 9.6 வட்டி விகிதமாக ஆண்டிற்கு 15 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மின் வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையால் வட்டி தொகையில் 2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

2006 முதல் 5 ஆண்டுகள் மின் தேவை அதிகரித்த நேரத்திலும் மின் வழித்தடம் அதிகமாக இல்லாத நிலையில் கூட தனியரிடமிருந்து யூனிட்டிற்கு 3 ரூபாய் 58 பைசாவிற்கு வாங்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 5 ரூபாய் 1 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

உப்பூர் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

கடந்த ஆட்சியில் விஷன் 20, 20 திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு நான்கரை லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தபட்டது?. பொறுப்பில் இருந்தவர்கள் தங்களது தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும்.

தாங்கள் செய்ய தவறிய திட்டங்களை தி.மு.க. ஆட்சி தற்பொழுது முன்னெடுத்து செய்வதை வரவேற்க வேண்டும். மக்களை திசை திரும்பும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட நிலுவையில் உள்ள மின்துறை திட்டங்களை செயல்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்