ஒன்றிய அரசு: வார்த்தை மாற்றங்களால் அதிகாரங்களைக் கூட்ட குறைக்க முடியாது - ஜி.கே.வாசன்

ஒன்றிய அரசு என்ற வார்த்தை மாற்றங்களால் அதிகாரங்களைக் கூட்ட குறைக்க முடியாது என்று தாமக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-03 12:31 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், த.மா.க தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காமராஜர் பிறந்த நாளை நாடெங்கும் கொண்டாட இருக்கிறோம். தடுப்பூசி 100% அவசியம் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மக்களிடம்  தனித்தனியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம். திங்கள் முதல் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட தொகுதிகளில் எங்களால் முடிந்தவரை வெற்றிப்பெற முயற்சிகள் செய்தோம். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு உலகளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீது விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் ஹைட்ரோகார்பன் மற்றும் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மாணவர்களை குழப்ப வேண்டாம். மாணவர்களை நீட் தேர்விற்கு தற்போது தயார்படுத்துவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். 

ஒன்றிய அரசு என்ற எதுவானாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் அதிகாரங்களை குறைக்கப்போவதில்லை, மத்திய, மாநில அரசின் அதிகாரங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே வார்த்தை மாற்றங்களால் அவரவர் மரியாதையை கூட்டவோ குறைக்கவோ முடியாது. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அனைவரின் ஆசை தான். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அதிமுக உடனான கூட்டணி தொடரும். கொரோனா காலக்கட்டத்தில் எல்லா கட்சியினரும் ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்