ஜெயலலிதா போல அ.தி.மு.க.வை நிலைநிறுத்துவேன்; கடவுள் என்னை கைவிடமாட்டார்: சசிகலா

‘‘ஜெயலலிதா போல அ.தி.மு.க.வை நிலைநிறுத்தி காட்டுவேன். கடவுள் என்னை கைவிடமாட்டார்’’, என சசிகலா பேசியுள்ளார்.

Update: 2021-07-06 18:59 GMT
ஊரடங்கு முடிந்ததும்...
சசிகலா தினந்தோறும் தொலைபேசியில் தொண்டர்களுடன் பேசி வருகிறார். அந்தவகையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோதண்டபாணி, உமா மகேஸ்வரி மற்றும் மதுரையை சேர்ந்த லட்சுமிராஜன், பொள்ளாச்சியை சேர்ந்த குமார் பழனிசாமி, கன்னியாகுமரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சசிகலா நேற்று பேசினார். 

அதன் விவரம் வருமாறு:-

ஊரடங்கு முடிந்ததும் ஜெயலலிதா நினைவிடம் சென்றுவிட்டு, அதன்பிறகு தொண்டர்கள் அனைவரையும் சந்திக்க வருவேன். அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்த சூழலில்கூட, இடைத்தேர்தலில் நமது எம்.எல்.ஏ.க்கள் வெற்றிபெற்றார்கள். அந்த எம்.எல்.ஏ.க்களை தூக்கி எறிந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும்.கட்சியில் எல்லாரும் ஒற்றுமையாக இணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்று தான் திரும்ப திரும்ப சொல்லி சென்றேன். அதையும் அவர்கள் செய்யவில்லை. தற்போது ஆட்சியை இழந்து நிற்பதுதான் மிச்சம். எனவே ஜெயலலிதா போல கட்சியை நான் நிலைநிறுத்துவேன்.

கடவுள் கைவிடமாட்டார்
எனக்கு கடவுள் பக்தி அதிகம் இருக்கிறது. நிச்சயம் அந்த தெய்வம் நல்லதே செய்யும். கடவுள் என்னை கைவிடமாட்டார். தொண்டர்களை எப்போதுமே மதிக்கும் பழக்கும் உள்ளவள் நான். தொண்டர்கள் என்கூட இருக்கும் வரை எதைப்பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.

இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்