ஒளிப்பதிவு சட்ட திருத்தத்துக்கு எதிராக கருத்து: நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? பா.ஜ.க.வுக்கு, சீமான் கண்டனம்

ஒளிப்பதிவு சட்ட திருத்தத்துக்கு எதிராக கருத்து: நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? பா.ஜ.க.வுக்கு, சீமான் கண்டனம்.

Update: 2021-07-09 00:16 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்ட திருத்தத்தை எதிர்த்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பா.ஜ.க.வின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.

கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் ஆபத்தையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மன குமுறலை வெளிப்படுத்தியிருக்கும் சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும்.

இதற்கிடையில் சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க பா.ஜ.க. அழைப்பது கேலிக்கூத்தானது. சூர்யாவை விவாதத்துக்கு அழைக்கும் பா.ஜ.க. தலைவர்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன். என்னோடு விவாதிக்க தயாரா?

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும். அவரை தனியொரு நபரென நினைத்துக்கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப் பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்