பெட்ரோல், டீசல் விலை உயர்வு: விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்....

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

Update: 2021-07-09 00:49 GMT
சென்னை,

நாட்டில் எந்த ஒரு சரக்குகளையும் எடுத்து செல்வதற்கு வாகன போக்குவரத்து என்பது அவசியமாகிறது. அதே வேளையில் தகவல் பரிமாற்றத்திற்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்து விட்டன. நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப போட்டி போட்டிக்கொண்டு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் அவற்றுக்கு பயன்படுத்தும் எரிபொருளும் விட்டேனா பார்..! என்று போட்டி போட்டு முன்னேறி செல்கிறது.

தமிழகத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் போக்குவரத்து வாகனங்களும், 2 கோடியே 45 லட்சம் போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என மொத்தம் 2 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரம் வாகனங்கள் உள்ளன.

வாகனங்களின் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. வாடகை அல்லது வெகுமதிக்காக, பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பஸ்கள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்களான ஆம்னி பஸ்கள், மேக்ஸிகேப், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகிய வாகனங்கள் போக்குவரத்து வாகனங்கள் ஆகும்.

நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு போக்குவரத்து லாரிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் உள்ளன. 15 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் தரைவழிப் போக்குவரத்து துறையும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சேவை என்ற அடிப்படையிலும் பொதுமக்களின் அன்றாட தேவையான காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் கியாஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் இந்த லாரிகள் மூலம்தான் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இரு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் விழிபிதுங்கிய நிலையில் கண்ணீர் சிந்தாத குறையாக உள்ளனர். தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயையும், டீசல் விலை 94 ரூபாயையும் கடந்து உயர்ந்து கொண்டிருப்பதால் வாகன பயன்பாட்டாளர்கள் கவலை கொண்ட வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், கார்களை பயன்படுத்துவோர் அவற்றை தவிர்த்து வருவதை திருச்சி மாநகரில் காண முடிகிறது. பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு பின்னர் மாநகர சாலைகளில் சைக்கிளில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு சான்று.

அதேபோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக சரக்கு வாகன வாடகையும் கணிசமாக உயரக்கூடிய நிலை இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வினால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவற்றின் உரிமையாளர்கள் கதறுகிறார்கள். ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால் தொழில் முடங்கி லாரிகள் அனைத்தும் குடோனில் நிறுத்தப்பட்டு இருந்தன.

அதே வேளையில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் லாரி வாடகையும் 20 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டாலும் சரக்கு போக்குவரத்து என்பது தேக்க நிலை அடைந்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்