பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு காங்கிரசார் நூதன போராட்டம் சைக்கிள்-மாட்டு வண்டியில் ஊர்வலம் சென்றனர்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி ஊர்வலம் போன்ற நூதன போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 01:16 GMT
சென்னை,

பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு அருகே தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் நடந்த ஊர்வலத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. கே.ராணி, மாநில செயலாளர் ஏ.வி.எம்.ஷெரீப், துணைத்தலைவர் மயிலை தரணி, தலைமை நிலைய செயலாளர் திருவான்மியூர் மனோகரன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளுடன் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். அதேபோல சில வாகனங்களில் சிலிண்டர் கட்டப்பட்டு, மாலை அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன.

கையெழுத்து இயக்கம்

காங்கிரசார் நடத்திய சைக்கிள் ஊர்வலம் விருகம்பாக்கம், தியாகராயநகர் கடந்து சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சாலையில் நிறைவடைந்தது. சைக்கிள் ஊர்வலத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி., எஸ்.ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் முடித்துவைத்தனர். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சைதாப்பேட்டையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. துணைத்தலைவர்கள் சுசிலா கோபாலகிருஷ்ணன், சாந்தி ஜோசப், மலர்க்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை சு.திருநாவுக்கரசர் எம்.பி. பங்கேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசு ஏழை மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பரிதவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் ஓயாது’’, என்றார்.

மாட்டு வண்டி ஊர்வலம்

கையெழுத்து இயக்கத்தை தொடர்ந்து மாட்டு வண்டியில் கவர்னர் மாளிகை நோக்கி மாட்டு வண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா தலைமையில் நிர்வாகிகள் துகிலா, சரளாதேவி, உமா, தங்கம் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில் மாட்டு வண்டி ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சு.திருநாவுக்கரசர், எஸ்.ஜோதிமணி, செல்வபெருந்தகை, ஆர்.சுதா ஆகியோர் கவர்னர் மாளிகை சென்றனர். அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல சென்னையில் பல்வேறு இடங்களில் தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தலைமையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்தன.

மேலும் செய்திகள்