இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் கல்யாண மாப்பிள்ளை வெட்டிக்கொலை தந்தை கைது

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் கல்யாண மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-11 02:29 GMT
மதுரை, 

மதுரை மாவட்டம் அய்யனகவுண்டன் பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 49). சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ராணி(45). இவர்களுக்கு சுபாஷ்(22), பிரதீப்(20) என்ற 2 மகன்கள். ஒரு மகளும் உள்ளார். இதில் பிரதீப் ஆடு வளர்த்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவருக்கும், அவரது உறவினர் பெண்ணிற்கும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

இந்தநிலையில் பிரதீப் நேற்று மாலை 5 மணி அளவில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது திருமணத்தையொட்டி நண்பர்களுக்கு மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் இளங்கோவன் பணம் தர முடியாது என மறுத்துள்ளார்.

மேலும் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்கிறாயே என திட்டியுள்ளார். அதற்கு, பணம் தரவில்லை என்றால் நான் திருமணம் செய்யமாட்டேன் என்று பிரதீப் கூறி வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்தாராம்.

இதுதொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீப் அங்கிருந்த கோடரியை எடுத்து இளங்கோவனை வெட்ட முயன்றார். அதை இளங்கோவன் பறித்து திருப்பி தாக்க முயன்றதாகவும், அப்போது பிரதீப் கழுத்தில் கோடரி வெட்டியதாகவும் தெரியவருகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் பிரதீப் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாடிப்பட்டி போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். இந்த சம்பவத்தால், திருமண விழா நடக்க இருந்த வீடும், அப்பகுதியும் சோகமயமாகியது.

மேலும் செய்திகள்