தலீபான் தாக்குதல்; இந்திய புகைப்பட செய்தியாளர் மறைவு: தமிழக முதல்-அமைச்சர் இரங்கல்

ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய புகைப்பட செய்தியாளருக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-07-16 11:12 GMT

சென்னை,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது.

தலீபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வபோது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மரணம் அடைந்துள்ளார். கந்தகாரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்த தனிஷ் சித்திக் தனது திறமைக்கு சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெருந்தொற்று நோய்களின் பாதிப்பு, மனிதாபிமான நெருக்கடிகள் ஆகியவற்றை தனது கேமிராவால் படம் பிடித்து நமக்கு அளித்த டேனிஷ் சித்திக்கின் திடீர் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளேன்.

அவரது மறைவானது, எந்த வடிவிலான வன்முறை மற்றும் பயங்கரவாதமும் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என மீண்டும் உலகிற்கு ஒரு செய்தியை தந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்