‘நீட்’ தேர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2021-07-19 21:15 GMT
சென்னை,

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முழு கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.

இந்த ஆய்வின்போது விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர்ராஜா, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் டாக்டர் குருநாதன், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் சவுமியா, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் சாந்திமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

110 இடங்கள்

தமிழகத்தின் 2-ம் அலையின்போது கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையொட்டி தற்போது கே.கே.நகர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதலாக 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆக்சிஜன் ஜெனரேட்டரும் நிறுவப்பட்டுள்ளது. இதனால் எந்த சூழ்நிலையிலும் 100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து 70 இடங்களிலும், சி.எஸ்.ஆர். நிறுவனங்கள் மூலம் 40 இடங்களிலும் என மொத்தம் 110 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 20 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணி 3-ம் அலையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும்.

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று முழுவதுமாக முடியவில்லை. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 79 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறைவான எண்ணிக்கை இல்லை. 3-வது அலை வரும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய அரசிடம் இருந்து இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இதில் இன்றைய (நேற்றைய) நிலவரப்படி 3 லட்சத்து 42 ஆயிரத்து 800 கையிருப்பில் உள்ளன. கூடுதல் தடுப்பூசி வரும் என எதிர்பார்த்துள்ளோம். தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

‘நீட்’ தேர்வு

‘நீட்’ விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றியது யார்? என்பது மக்களுக்கே தெரியும். ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட இந்த தேர்வை அவர் அனுமதிக்கவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிதான் இந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டார். கடந்த 4 ஆண்டு காலமாக தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வு வர உதவி செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ‘நீட்’ தேர்வு மூலம் 13 பேர் உயிரிழந்தனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என தி.மு.க. கோரிக்கை வைத்தது. அப்போதுதான் வேறு வழியில்லாமல் 7.5 சதவீதத்துக்கு ஒப்புக்கொண்டனர். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதற்கான மொத்த காரணமும் எடப்பாடி பழனிசாமிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

3-ம் அலையை எதிர்கொள்ள தயார்

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்வதற்காக ஆயிரம் டன் ஆக்சிஜன் மற்றும் 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. அந்த வகையில் கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத தடுப்பூசிகளில், 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தொகையை தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறுவது தொடர்பாக, தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகளுடன் கோவை மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்